துணை முதலமைச்சர் பதவி! உதயநிதிக்கு சாதகமாக பதில் சொன்ன மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று தகவல் பரவி வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது.
இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின், "இன்னும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வரவில்லை. இதன் முழு அதிகாரம் முதலமைச்சரிடம் தான் இருக்கிறது. அவரிடம் தான் இதை பற்றி கேட்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
முதலமைச்சர் பேசியது
சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |