காதலியுடன் தூங்கிக்கொண்டிருந்த பிரித்தானிய விஞ்ஞானி சுட்டுக்கொலை!
பிரித்தானியாவைச் சேர்ந்த 31 வயது விஞ்ஞானி, தனது காதலியை பார்க்க அமெரிக்கா சென்றிருந்தபோது பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமெரிக்க மாகாணமான ஜார்ஜியாவின் தலைநகர் அட்லாண்டாவில் தனது காதலியைப் பார்க்கச் சென்ற பிரிட்டிஷ் வானியல் இயற்பியலாளர், படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்தபோது தவறுதலாக வந்த தோட்டாவால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்தின் சர்ரே கவுன்டியில் உள்ள செர்ட்ஸியைச் சேர்ந்த டாக்டர் மேத்யூ வில்சன், 31, தனது காதலியுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரது படுக்கையறை சுவர் வழியாக வந்த ஒரு தோட்டா அவரது தலையில் பாய்ந்தது. இதன் காரணமாக அவர் அங்கேயே உயிரிழந்தார்.
வில்சன் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், பக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு குழுவில் பல தனிநபர்களால் "பொறுப்பற்ற முறையில்" துப்பாக்கிச்சுடு நடத்தப்பட்டதாக என்று புரூக்ஹேவனில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த குண்டு, காட்டு மரங்களைக் கடந்து 800 அடி தூரம் பயணித்து, பின்னர் ஒரு சுவற்றையும் துளைத்து இறுதியில் வில்சனின் தலையில் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து WSB-TVயிடம் பேசிய சார்ஜென்ட் ஜேக்கப் கிஸ்ஸல், "இது ஒரு அறிவற்ற செயல், இதனால் ஒரு அப்பாவி பலியானார். அவர் தனது காதலியைப் பார்ப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து இங்கு வந்திருந்தார்.
இது ஒரு சோகமான நிகழ்வு என பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள், மேலும் அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவலைக் கொண்டு வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
வில்சன், ஜார்ஜியா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் முதுகலை ஆராய்ச்சியாளராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார், பெல்ஜியத்தில் உள்ள லீஜ் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துள்ளார் என்று MailOnline-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


