பிரித்தானியாவின் புகலிடக்கொள்கையால் வன்முறையும் உயிரிழப்பும் அதிகரிப்பு: மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை
பிரித்தானியாவுக்குள் புகலிடக்கோரிக்கையாளர்கள் நுழைவதைத் தடுப்பதற்காக பிரித்தானியா வகுத்துள்ள கொள்கையால், வன்முறையும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை
பிரித்தானியா தனது எல்லைகளை பாதுகாப்பதற்காக பிரான்சுக்கு பல மில்லியன் பவுண்டுகளைக் கொடுத்துவருகிறது.

ஆனால், பிரான்சும் பிரித்தானியாவும் இணைந்து புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கும் நடவடிக்கைகள் பொலிஸ் வன்முறையையும் ஆட்கடத்தல்காரர்களின் வன்முறையையும் அதிகரித்துள்ளதாகவும், சில மரணங்களுக்கும் வழிவகுத்துள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
Humans for Rights Network என்னும் அமைப்புடன் வடபிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை மையமாகக் கொண்ட 17 அகதிகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளும் இணைந்து 176 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளன.
பிரித்தானியாவின் கடுமையான புலம்பெயர்தல் கொள்கைகளால், ஆட்கடத்தல் அதிகரிப்பதாக Mixed Migration Centre என்னும் அமைப்பு தெரிவிக்கிறது.
பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகளையும் மீறி, பிரித்தானியாவுக்குள் நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 37,000. இந்த ஆண்டோ அந்த எண்ணிக்கை 39,000ஐ தாண்டிவிட்டது.
மேலும், 2024இல் மட்டும் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 89ஆக பதிவாகியுள்ளது.
ஆக, பிரித்தானியா வகுத்துள்ள கொள்கையால், வன்முறையும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், அறிக்கை தொடர்பில் பதிலளித்துள்ள பிரித்தானிய உள்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோர் எண்ணிக்கை வெட்கத்துக்குரியது என்றும், ’British people deserve better’ என்றும் தெரிவித்துள்ளார்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |