உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்ப கருங்கடல் பாதையை பயன்படுத்தும் பிரித்தானியா: பகிரங்க குற்றச்சாட்டு
தானிய ஏற்றுமதிக்கு என உருவாக்கப்பட்ட கருங்கடல் பாதையை உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்ப பிரித்தானியா பயன்படுத்துவதாக ரஷ்யா பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
உக்ரேனிய துறைமுகங்கள் மீதான ரஷ்ய தாக்குதல்கள் மற்ற நாடுகளுக்கான முக்கியமான தானிய விநியோகத்தை சீர்குலைத்துவிட்டதாக பிரித்தானியா குற்றஞ்சாட்டிய நிலையிலேயே ரஷ்யா புதன்கிழமை பிரித்தானியா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்கள் மீதான ரஷ்ய தாக்குதல்கள் காரணமாக பாலஸ்தீனியர்களுக்கான முக்கிய உதவி தாமதப்படுவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், உலகளாவிய தெற்கிற்கு முக்கியமான தானிய விநியோகம் தடைபடுவதாகவும் ஸ்டார்மர் தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, உக்ரேனிய கருங்கடல் துறைமுகங்கள் மீதான ரஷ்ய தாக்குதல்கள் செப்டம்பர் 1 முதல் ஆறு பயணிகள் கப்பல்கள் மற்றும் தானிய உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இத்தகைய தாக்குதல்களால் ரஷ்யா உலகளாவிய உணவுப் பாதுகாப்பை சேதப்படுத்துகிறது என்ற ஸ்டார்மரின் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை என தெரிவித்துள்ளார்.
ஆறு மில்லியன் டன்
மேலும், தானிய ஏற்றுமதிக்கு என உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பான வழித்தடத்தை உக்ரைனுக்கான ஆயுத ஏற்றுமதிக்காக பிரித்தானியா பயன்படுத்தி வருகிறது என்பதே உண்மை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களிடம் காணொளி ஆதாரம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஜாகரோவா, இந்த விவகாரம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் விசாரணையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022ல் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்புவதற்கு முன்பு கருங்கடல் வழியாக மாதத்திற்கு சுமார் ஆறு மில்லியன் டன் தானியங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உக்ரைன் உலகளாவிய கோதுமை மற்றும் சோள உற்பத்தியாளராக அறியப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மன்றத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரைன் இணைந்து முன்னெடுத்த தானிய ஏற்றுமதி ஒப்பந்தமானது கடந்த ஆண்டு முடிவுக்கு வர, கருங்கடலில் தானிய ஏற்றுமதி பாதை ஒன்றை உக்ரைன் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |