பிரித்தானியாவை தாக்கவுள்ள சந்திரா புயல்- கடுமையான காற்று, மழை எச்சரிக்கை
பிரித்தானியாவை சந்திரா புயல் தாக்கவுள்ளதால், வானிலை ஆய்வு மையம் கடும் காற்று மற்றும் கனமழைக்கான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இது ஜனவரி மாதத்தில் பிரித்தானியாவை தாக்கும் மூன்றாவது பெரிய புயலாகும்.
இதற்கு முன் Goretti மற்றும் Ingrid புயல்கள் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தன.
பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைகளின்படி, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வடக்கு அயர்லாந்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் அபாயம் உள்ளது.
கடற்கரை பகுதிகளில் பெரிய அலைகள் கடல் சுவர்களைத் தாண்டும் அபாயமும் உள்ளது.

தென்-மேற்கு இங்கிலாந்தில் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை 30-50 மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில உயரமான பகுதிகளில் 80 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நிலம் நனைந்துள்ளதால் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.
ஸ்காட்லாந்து, வேல்ஸ், லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில உயரமான பகுதிகளில் மழை பனியாக மாறும். 5-20 செ.மீ. வரை பனி படியும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக விமான, ரயில், கடல் போக்குவரத்து தாமதம் அல்லது ரத்து செய்யப்படலாம். மின்சாரம் துண்டிப்பு, சாலைகள் வெள்ளத்தில் மூழ்குதல், மரங்கள் விழுதல், நிலச்சரிவு போன்ற அபாயங்கள் அதிகம்.
“கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்ததால், சந்திரா புயல் வெள்ள அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.” என UK Met Office தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் ஜனவரி மாதம் கடும் புயல்களால் பெரும் சவாலாக மாறியுள்ளது. சந்திரா புயல் தாக்கம் அடுத்த சில நாட்களில் நாட்டின் வாழ்க்கை முறையை கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |