குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI - பிரித்தானிய அரசின் திட்டம்
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது.
தனிப்பட்ட ஆலோசனைகள் தொடங்கி, மருத்துவம், ஆராய்ச்சி என அனைத்து துறைகளிலும் AI அதன் பங்களிப்பை வழங்கி வருகிறது.
AI குற்ற முன்கணிப்பு அமைப்பு
அதே போல், AI அடிப்படையிலான குற்ற முன்கணிப்பு அமைப்பை உருவாக்க உள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, மேம்பட்ட AI மூலம் காவல்துறை, சமூகசேவை அமைப்புகள், கவுன்சில்கள் இடையே பகிரப்பட்ட காவல்துறையின் ஆவணங்கள், முன்னர் குற்றம் நடைபெற்ற இடங்கள் ஆகிய தகவல்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என ஆராயும்.
இதனை மேம்பட்ட தரவு பகுப்பாய்வு செய்து, விரிவான, நிகழ்நேர, ஊடாடும் குற்ற வரைபடம் உருவாக்கப்படும்.
இதன் மூலம், குற்றம் எங்கே நிகழ வாய்ப்புள்ளது என்பதை கணிக்க முடியும். மேலும், இதனை பயன்படுத்தி சிறிய சம்பவங்கள் கடுமையான அச்சுறுத்தலாக மாறும் முன்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று குற்றத்தை தடுக்க முடியும்.
குற்றவாளிகளின் நடத்தைகள், முன்னர் குற்றச்சம்பவம் நடைபெற்ற இடங்கள், பிற சூழல் காரணிகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து திருட்டு, வன்முறை, கத்தி தாக்குதல்கள் ஆகியவற்றின் ஆரம்பத்திலே அறிகுறி காட்டப்படும்.
இந்த திட்டம் பிரித்தானிய அரசின் 500 மில்லியன் யூரோ ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு பணிகள் முடுக்கி விடும் திட்டத்தின் ரு பகுதி ஆகும்.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
ஆரம்பகட்ட 4 மில்லியன் யூரோ முதலீட்டில், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் ஆராய்ச்சி குழுக்கள் ஏப்ரல் 2026 ஆம் ஆண்டுக்குள் முன்மாதிரியை வழங்க உள்ளது.
மேலும், 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர், இது முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பேசிய காவல் மற்றும் குற்ற தடுப்பு அமைச்சர் டேம் டயானா ஜான்சன், "தொழில்நுட்ப உதவியுடன் குற்ற அமைப்புகள் வளர்ச்சியடையும் நிலையில், நமது எதிர்வினையும் அவ்வாறே இருக்க வேண்டும்.
இதன் ஒரு பகுதியாக குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் AI கருவிகளில் நாங்கள் முதலீடு செய்ய விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இது போன்ற AI அடிப்படையிலான குற்ற முன்கணிப்பு அமைப்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் சிகாகோ சோதனை செய்யப்பட்டது. ஆனால் அதன் இன சார்பு காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
அதேவேளையில், நெதர்லாந்தில் திருட்டை குறைப்பதில் இந்த அமைப்பு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |