கத்தாரின் தலையீடு... தாலிபான்கள் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி
பிப்ரவரியில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைது செய்யப்பட்ட வயதான பிரித்தானிய தம்பதி ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நால்வர் கைது
கத்தார் நிர்வாகம் முன்னெடுத்த முயற்சிகளை அடுத்து, விடுவிக்கப்பட்ட அந்த தம்பதி தற்போது தோஹாவிற்கு பயணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான்களின் பிடியில் சிக்கிய பார்பி மற்றும் பீட்டர் ரெனால்ட்ஸ் ஆகியோரின் உடல் நலம் உட்பட அவர்கள் தொடர்பில் குடும்பத்தினர் தொடர்ந்து தங்களின் கவலைகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
பிப்ரவரி 1ம் திகதி ஆஃப்கானிஸ்தான் அதிகாரிகளால் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் இருவர் பிரித்தானியர்கள் என பின்னர் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கம் மற்றும் தம்பதியரின் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து, கத்தார் பல மாதங்களாக தாலிபான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த 8 மாத காலம் அவர்கள் இருவரும் தனித்தனியாகவே காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் காபூலில் உள்ள கத்தார் தூதரகம் அவர்களுக்கு மருத்துவரை அணுகுதல், மருந்துகளை வழங்குதல் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் வழக்கமான தொடர்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான உதவிகளை வழங்கி வந்துள்ளது.
அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல்
பிப்ரவரி மாதம் தாலிபான்கள் வெளியிட்டுள்ள தகவலில், மத்திய ஆப்கானிஸ்தான் மாகாணமான பாமியானில் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரிவதாக நம்பப்படும் இரண்டு பிரித்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் விமானத்தைப் பயன்படுத்தியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்படும் வெளிநாட்டினரை விடுவிப்பதை உறுதிசெய்ய கத்தார் பாடுபட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |