மனைவி குடும்பத்தைக் கொல்ல முயன்றதற்காக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இந்தியர்: நாடுகடத்தும் முயற்சி துவக்கம்
இங்கிலாந்திலிருந்தபடி, இந்தியாவில் வாழும் தனது முன்னாள் மனைவியையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயன்ற இந்தியர் ஒருவரை நாடுகடத்தும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இந்தியர்
இங்கிலாந்தின் Berkshireஇலுள்ள Maidenhead என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் அஜித் குமார் முப்பரப்பு (Ajith Kumar Mupparapu) என்னும் இந்தியர், பயங்கர கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றங்களுக்காக கடந்த ஆண்டு பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டார்.
அஜித் குமாருக்கும், Dr சிரிஷா முட்டவரப்பு (Dr Sirisha Muttavarapu) என்னும் பெண்ணுக்கும், இந்தியாவின் ஹைதராபாதில் வைத்து திருமணம் ஆகியுள்ளது.

இருவரும் பிரித்தானியா சென்றபிறகு, அஜித் குமார் சிரிஷாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதால், சிரிஷா 2022ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பிக்க நேர்ந்துள்ளது.
ஆகவே, இந்தியா சென்றுவிட்ட மனைவியையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார் அஜித் குமார்.
2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் சிரிஷாவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயன்ற ஆறு பேர் கைது செய்யப்பட, அதைத் தொடர்ந்து அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிரவைக்கும் தகவல்கள்
ஆம், 2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் ஆகத்து மாதம் வரை சிரிஷாவையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய கூலியாட்களை ஏற்பாடு செய்துள்ளார் அஜித் குமார்.
2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சிரிஷாவின் வீட்டுக்கு உணவு டெலிவரி செய்யும் ஆட்கள் மூலம் விஷம் கலந்த மசாலா பொருட்களை அனுப்பியுள்ளார் அஜித் குமார்.

அதை உட்கொண்ட சிரிஷாவின் சகோதரரான புரேந்தரின் மாமியாரான உமா மகேஷ்வரி (60) உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.
ஆனால், சிரிஷா, புரேந்தர், அவரது மனைவியான சசிரேகா, அவரது தந்தையான ஹனுமந்த ராவ் ஆகியோர் உயிர் பிழைத்துக்கொண்டார்கள்.
என்றாலும், அவர்களுடைய உடலில் பெருமளவில் விஷம் இருந்தது மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்தது.
பின்னர், ஹனுமந்த ராவின் கழுத்தில் ஊசி மூலம் விஷத்தை செலுத்த ஆட்களை ஏற்பாடு செய்துள்ளார் அஜித் குமார்.
நாடுகடத்தும் முயற்சி துவக்கம்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி அஜித் குமார் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை இந்திய அதிகாரிகள் துவக்கியுள்ளார்கள்.
இந்த வார துவக்கத்தில் அஜித் குமார் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவரை நாடுகடத்துவது தொடர்பிலான நடவடிக்கைகள் முறைப்படி துவக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அஜித் குமார் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டால், அவர் இந்திய சிறையில் மோசமாக நடத்தப்படலாம் என்றும், சித்திரவதை செய்யப்படலாம் என்றும் அவர் தரப்பு சட்டத்தரணிகள் வாதம் முன்வைத்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |