கிறிஸ்துமஸ் தினத்தன்று கடலில் மூழ்கிய இருவர்: பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று கடலில் மூழ்கி இரண்டு பேர் மாயமான நிலையில் பொதுமக்களுக்கு பொலிஸார் முக்கிய அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
கடலில் மூழ்கிய இருவர்
பிரித்தானியாவின் டெவோன்(Devon) கடற்கரை பகுதியில் குளிக்கச் சென்ற இரண்டு பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியை பொலிஸார் தீவிரப்படுத்தி இருந்தனர்.

ஆனால் மாயமான 40 வயதுடைய மற்றும் 60 வயதுடைய அந்த இரண்டு பேரையும், மீட்பு படையினரின் தீவிர முயற்சிகளுக்கு பிறகும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தேடுதல் வேட்டையானது வியாழக்கிழமை மாலை அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 10.45 மணி அளவில் பட்லீ சால்டர்டன் கடற்கரைப் பகுதியில் இருவர் நீரில் தத்தளித்ததை அடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீட்பு குழுவினர் விவரித்த தகவலில், தென்மேற்கு பகுதியில் பலத்த காற்று வீசியதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது, இதனால் கடல் அலைகளின் சீற்றம் கடுமையாக இருந்ததன் காரணமாக கடலில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்நிலையில், டெவோன் கடற்கரையில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என்று காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாக்ஸிங் டே அன்று கடலில் குளிக்க திட்டமிட்டுள்ள அனைவரும் அந்த முடிவை கைவிட்டு விட்டு கடலில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என்று டெவோன் மற்றும் கார்ன்வால் காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் ஹெய்லி கோஸ்டார் அறிவுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |