பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்திற்காக காத்திருப்பு காலம் இரட்டிப்பு
UK Doubles Residency Wait to 10 Years for Migrants: பிரித்தானிய அரசு தனது குடியேற்றக் கொள்கையில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
10 ஆண்டுகளாக உயர்வு
புதிய விதிகளின்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள் நிரந்தர வதிவிடத்திற்காக (Indefinite Leave to Remain) காத்திருக்க வேண்டிய காலம் 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் நாடாளுமன்றத்தில் இந்த மாற்றங்களை அறிவித்தார்.

நிரந்தர வதிவிடம் பெற்றவர்களுக்கு வேலை செய்யும் உரிமை, கல்வி பயிலும் வாய்ப்பு, தேசிய சுகாதார சேவை (NHS) பயன்பாடு மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் உரிமை கிடைக்கிறது.
இதுவரை 5 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இந்த உரிமை வழங்கப்பட்டு வந்தது. புதிய விதிகளின் அடிப்படையில் ஆண்டு வருமானம் 50,000 பவுண்டை விட அதிகமாக உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகும், 125,000 பவுண்டை விட அதிக வருமானம் பெறுவோர் 3 ஆண்டுகளுக்குப் பிறகும் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் மற்ற பெரும்பாலான தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த விதி தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணியாளர்களுக்கு விலக்கு
இதேவேளை, சமூக பராமரிப்பு (Care Worker) துறையில் பணிபுரிபவர்களுக்கு அரசு முக்கிய சலுகை வழங்கியுள்ளது. விசா நிபந்தனைகளை முறையாக பின்பற்றி, ஆண்டுக்கு குறைந்தது 25,000 பவுண்டு வருமானம் பெறும் பராமரிப்பு பணியாளர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர குடியுரிமை பெற முடியும். தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்த அவர்களின் பங்களிப்பை அரசு அங்கீகரித்துள்ளது.
30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை
அதேபோல், அகதிகள் தொடர்பாகவும் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் சட்டபூர்வ பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வரும் அகதிகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமைக்கு தகுதி பெறுவார்கள். ஆனால் பிற வழிகளில் வரும் அகதிகள் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். சிறிய படகுகள் போன்ற சட்டவிரோத வழிகளில் நாட்டுக்குள் நுழைந்தவர்களுக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.
தகுதியற்றவர்கள்
மேலும், குற்றப் பதிவுகள் உள்ளவர்கள், உயர்தர ஆங்கில அறிவு இல்லாதவர்கள், அரசுக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளவர்கள் மற்றும் குறைந்தது 3 ஆண்டுகள் தேசிய காப்பீட்டு பங்களிப்பு செலுத்தாதவர்கள் நிரந்தர வதிவிடத்திற்கு தகுதியற்றவர்களாக கருதப்படலாம்.
இந்த மாற்றங்கள் பிரித்தானியாவின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதோடு, நாட்டின் பொருளாதார பங்களிப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய அணுகுமுறையையும் பிரதிபலிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |