பிரித்தானியாவில் 86 நாட்கள் கோமாவிலிருந்த இந்திய நடனக்கலைஞர்: பின்னர் நிகழ்ந்த அற்புதம்
இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் பாங்க்ரா நடனக்கலைஞர் ஒருவர் கோமாவிலிருந்த நிலையில், அவர் இனி பிழைக்கமாட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.
பர்மிங்காமில் வாழ்ந்து வரும் பல்விந்தர் சாஃப்ரி (63), இதய அறுவை சிகிச்சை ஒன்றைத் தொடர்ந்து மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் கோமா நிலைக்குச் சென்றார்.
அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ஒரு நாள் பல்விந்தரின் மனைவியான நிக்கிக்கு ( Nikki Davitt) மருத்துவர்களிடமிருந்து ஒரு அழைப்பு வந்ததாம். அவர் இனி பிழைக்கமாட்டார், அவரை வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள் என மருத்துவமனை ஊழியர்கள் நிக்கியிடம் கூறினார்களாம்.
அப்படிப்பட்ட நிலையில் இருந்த பல்விந்தர், 86 நாட்கள் கோமாவிலிருந்த நிலையில், தற்போது அற்புதவண்ணமான சுகம் பெற்றிருக்கிறார்.
Photo - ROYAL WOLVERHAMPTON NHS TRUST
நிக்கி தன் கணவரிடம், நான் பேசுகிறது உங்களுக்குக் கேட்கிறதா என்று கேட்க, கோமாவிலிருந்து மீண்ட அவர், ஆம், நீ பேசுவது கேட்கிறது என முதன்முதலாக பேச, அவர் பேசிய வார்த்தைகளைத் தன்னால் மறக்கவே முடியாது என்கிறார் நிக்கி.
17 ஆண்டுகள் பல்விந்தருடன் வாழ்ந்த நிக்கி, தன் கணவர் உயிர் பிழைத்தது ஒரு அற்புதம் என்கிறார்.
இதற்கிடையில், பல்விந்தர் கோமாவிலிருந்து விடுபட்டுவிட்டாலும், இனி அவர் பேச மற்றும் நடக்க மீண்டும் கற்றுக்கொள்வதற்காக புனர் வாழ்வு மையம் ஒன்றில் அனுமதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.