உணவு ஏற்றுமதி தடைகளை நீக்க பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய ஒப்பந்தம்
UK-EU Deal Ends Brexit Food Export Barriers: பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
வரைவு ஒப்பந்தம்
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில், பிரெக்சிட்டுக்குப் பிறகு அமுல்படுத்தப்பட்ட பல்வேறு உணவு மற்றும் வேளாண் பொருட்கள் மீதான சோதனைகள், ஆவண நடைமுறைகள் மற்றும் நிர்வாகத் தடைகளை நீக்கும் முக்கியமான வரைவு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இம்மாதம் நடைபெறவுள்ள UK-EU உச்சி மாநாட்டிற்கு முன்பாக கையெழுத்தான இந்த ஒப்பந்தம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
பிரெக்சிட்டுக்குப் பிறகு, பிரித்தானியாவில் இருந்து ஐரோப்பிய சந்தைகளுக்கு உணவு மற்றும் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பல்வேறு சுகாதாரச் சான்றிதழ்கள், தாவர சுகாதார அனுமதிகள், ஆய்வு கட்டணங்கள் மற்றும் எல்லைச் சோதனைகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது.
இதனால் ஏற்றுமதி செலவுகள் அதிகரித்ததுடன், சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டன. தற்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள சுமார் 200 பக்கங்களைக் கொண்ட "SPS" (Sanitary and Phytosanitary) ஒப்பந்தம், இந்த நடைமுறைகளில் பெரும்பாலானவற்றை எளிதாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 200 பவுண்டு மதிப்புள்ள Export Health Certificates, தாவர சுகாதாரச் சான்றிதழ்கள், ஆய்வாளர் கட்டணங்கள், சில துறைமுகக் கட்டணங்கள் மற்றும் பல்வேறு கூடுதல் சோதனைகள் நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரித்தானியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புதிய சாசேஜ்கள், பர்கர்கள், கடல் உணவுகள் மற்றும் விதை உருளைக்கிழங்குகள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி மீண்டும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செல்லப்பிராணிகளுக்கான பயண வசதிகளும் மேம்படுத்தப்படும்.
பிரித்தானிய அரசு இந்த ஒப்பந்தம் நீண்டகாலத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 5.1 பில்லியன் பவுண்டு மதிப்பிலான நன்மைகளை வழங்கக்கூடும் என்று நம்புகிறது. இதேவேளை, எல்லை தாமதங்கள் குறைவதால் வணிகங்களின் செலவுகளும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உணவு, தாவரங்கள் மற்றும் விலங்குகள் தொடர்பான வர்த்தகத் தரநிலைகளில் ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுடன் பிரித்தானியா தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருக்கும். இதனை சில பிரெக்சிட் ஆதரவாளர்கள் விமர்சித்தாலும், பல வணிக அமைப்புகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |