நாங்கள் அணு ஆயுத போரில் ஈடுபடமாட்டோம்! பிரித்தானியா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டறிக்கை
அணு ஆயுதங்கள் தயாரிப்பதில் வல்லரசு நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதனால் திடீரென்று நாடுகளுக்கிடையே போர் மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவியுள்ளது.
போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உலகளாவிய ஒப்பந்தங்கள் இருந்தாலும், அணு ஆயுதங்களை சண்டையில் பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகளை வலுவாக்க சர்வதேச சமூகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அணு ஆயுதங்களை தயாரிப்பதில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. தற்போதைய சூழலில் அமெரிக்காவுக்கு சீனா மற்றும் ரஷியாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து இருப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உக்ரைனை தாக்கினால் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்நிலையில் அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம் என்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய 5 நாடுகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்த 5 நாடுகளும் முதல் முறையாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு ஆயுத போரை தவிர்ப்பதும், ஆயுத போட்டி அபாயங்களை குறைப்பதும் தங்களின் முதன்மையான பொறுப்புகளாக கருதுகிறோம்.
அணு ஆயுத போரால் வெற்றி பெற முடியாது. அது ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அணுசக்தி பயன்பாடு நீண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அணு ஆயுதங்கள் தொடர்ந்து இருக்கும் வரை தற்காப்பு நோக்கங்களுக்காக சேவை செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். போரை தடுக்க வேண்டும். இதுபோன்ற ஆயுதங்கள் மேலும் பரவுவதை தடுக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.