Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா
Chelsea கால்பந்து அணியை விற்றதிலிருந்து 2.5 பில்லியன் பவுண்டுகள் தொகையை உக்ரைனுக்கு வழங்குவதற்காக விடுவிக்குமாறு ரஷ்ய கோடீஸ்வரருக்கு பிரித்தானியா இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடைசி வாய்ப்பு
அடுத்த 90 நாட்களுக்குள் தொடர்புடைய பணம் விடுவிக்கப்படவில்லை என்றால் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் விவகாரத்தில் பிரித்தானியாவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்பவர் ரஷ்ய கோடீஸ்வரரான ரோமன் அப்ரமோவிச்.
இந்த நிலையில், அப்ரமோவிச்சிடமிருந்து பெறப்படும் தொகை உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க ஒரு புதிய அடித்தளமாக மாற்றப்படும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் Chelsea கால்பந்து அணி விற்பனை தொடர்பில் பரிமாற்றத்திற்கான உரிமத்தை வழங்குவது அப்ரமோவிச் இணங்க வேண்டிய கடைசி வாய்ப்பு என்றும் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, இந்த நகர்வானது ஒரு முக்கியமான ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஸ்டார்மர் அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகிறது.
உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோ தொகையை கடனாக வழங்க ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்த இந்த உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வலியுறுத்துவார்கள்.

இந்த நிலையில் Chelsea கால்பந்து அணி விற்கப்பட்டால், உக்ரைனுக்கான மனிதாபிமான நோக்கத்திற்காக 2.5 பில்லியன் பவுண்டுகள் அளிக்கப்படும் என ரோமன் அப்ரமோவிச் உறுதிமொழி அளித்திருந்த நிலையில், அவர் அதை மதிக்க வேண்டும் என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கைகள் தாமதமானால், இந்த அரசாங்கம் நீதிமன்ற நகர்வுகளால் நடவடிக்கை முன்னெடுக்கும் என்றும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய மக்களும்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு பிரித்தானிய அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் ரஷ்ய கோடீஸ்வரரான ரோமன் அப்ரமோவிச் 2022 இல் Chelsea கால்பந்து அணியை விற்றார்.

உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பணம் செலவிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, Chelsea அணிடை விற்க அப்ரமோவிச்சிற்கு பிரித்தானியா அரசாங்கத்திடமிருந்து உரிமம் வழங்கப்பட்டது.
ஆனால், குறித்த தொகையானது உக்ரைனில் மட்டுமே செலவிடப்பட வேண்டுமா அல்லது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப செலவிட முடியுமா என்பது குறித்து அப்ரமோவிச்சுடனான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டை காரணமாக, பணம் முடக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடுவதில் அப்ரமோவிச்சிற்கு மற்றுக்கருத்தில்லை, ஆனால் ரஷ்ய மக்களும் இதில் பயனடைய வேண்டும் என அவர் வாதிட்டு வருகிறார்.
இந்த நிலையில் உக்ரைனுக்கு தானாக முன்வந்து நிதியை நன்கொடையாக வழங்குவதற்கான எந்தவொரு திட்டத்தையும் அப்ரமோவிச்சிடமிருந்து பரிசீலிப்பதாக ஸ்டார்மர் அரசாங்கம் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |