பனிப்பொழிவு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
UK households urged to make sure phones are charged: பிரித்தானியா, கடுமையான பனிப்பொழிவை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், பிரித்தானியர்கள் தங்கள் மொபைல்களை சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானியா, கடுமையான பனிப்பொழிவை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், அதற்காக சில முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு பிரித்தானியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
வட இங்கிலாந்து, இங்கிலாந்தின் மையப்பகுதி மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இடங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் பனிப்பொழிவு தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பனிப்பொழிவு காரணமாக வெளியே செல்லமுடியாத நிலை ஏற்படும் பட்சத்தில், உணவுப்பொருட்கள், வீட்டை வெப்பப்படுத்தும் வசதி மற்றும் மின்சாரம் ஆகிய விடயங்களுக்கு பிரச்சினை உருவாகலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நாளை, செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரைக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் 10 இஞ்ச் வரை பனி பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரில் பயணிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், வானிலையை கவனித்து நன்கு திட்டமிட்டு பயணம் மேற்கொள்ளுமாறும், மொபைல் போன்களை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வானிலை எதிர்பார்க்கும் அளவுக்கு மோசமடையவில்லை என்றாலும் கூட, அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வாங்கி சேமித்துவைத்துக்கொள்ளுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதால், டார்ச், பேட்டரிகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் அல்லது லைட்டர்கள், மற்றும் குளிருக்கு பாதுகாப்பாக போதுமான அளவில் போர்வைகள் மற்றும் தக்க உடைகளை தயாராக வைத்துக்கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.