பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழும் புதிய கோள்: ஆதாரத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி
பிரித்தானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர்.நிக்கு மதுசூதனன் தலைமையிலான குழு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளது.
K2-18b
பூமியில் இருந்து 700 ட்ரில்லியன் கிலோமீற்றர் தொலைவில் உள்ள கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இது சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கிறது. இதற்கு K2-18b என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பூமியை விட இருமடங்கு பெரிதான இந்த கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர்.நிக்கு மதுசூதனன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இதனை கண்டுபிடித்துள்ளது.
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் குழு, ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் K2-18b கோளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தது.
அதில் பூமியில் வாழும் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறான டை-மெத்தில்-சல்பைடு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன்மூலம் K2-18b கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய டாக்டர்.நிக்கு மதுசூதனன் கூறுகையில், "பூமிக்கு வெளியே உயிர்கள் இருக்கலாம் என்பதற்கான, இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான சான்று இது. இந்த சமிக்ஞையை ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் நாம் உறுதிப்படுத்த முடியும் என்று நான் யதார்த்தமாக கூற முடியும்" என்றார்.
மேலும் அவர், "K2-18bயில் உயிர் இருப்பதை நாம் உறுதிப்படுத்தினால், அது அடிப்படையில் விண்மீன் மண்டலத்தில் உயிர் மிகவும் பொதுவானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
யார் இந்த டாக்டர்.நிக்கு மதுசூதனன்?
இவர் கிரகங்களுக்கு வெளியே உள்ள வளிமண்டலங்கள், உட்புறங்கள் மற்றும் உயிரியல் கையொப்பங்கள் குறித்த தனது பணிக்காகப் பிரபலமானவர்.
IIT-BHU மற்றும் MIT பட்டதாரியான இவர் Yale, Princeton, Cambridge ஆகியவற்றில் ஆராய்ச்சிப் பணிகளை வகித்துள்ளார்.
இவரது குழுவின் ஆராய்ச்சியானது, பூமியைப் போல் அல்லாமல் - ஹைசியன் உலகங்கள் போன்ற கிரகங்களும் வாழ்க்கையை ஆதரிக்கக்கூடும் என்பதைக் காட்டும் வாழ்விடத்தின் வரையறையை விரிவுபடுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |