பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம்
பிரித்தானியாவில், இந்திய வம்சாவளியினருக்கு பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் அதிகம் பிறந்துள்ளது தெரியவந்துள்ளதால், அவர்கள் பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்
ஆசிய நாடுகள் சிலவற்றில் இப்போதும் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தொடரத்தான் செய்கிறது. பெண் சிசுக்கொலையும் கருக்கலைப்பும் நடப்பதை நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்நிலையில், பிரித்தானிய அரசு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், 2017க்கும் 2021க்கும் இடையிலான காலகட்டத்தில், பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் அதிகம் பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில், அந்த காலகட்டத்தில், இந்திய வம்சாவளியினருக்கு 15,401 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகளில், 100 பெண் குழந்தைகள் பிறந்த இடத்தில், ஆண் குழந்தைகளோ 113 பிறந்துள்ளன.
ஏற்றுக்கொள்ளத்தக்க ஆண் பெண் குழந்தை வீதம் 107 ஆகும். அதாவது, 100 பெண் குழந்தைகள் பிறந்த அதே காலகட்டத்தில் 107 ஆண் குழந்தைகள் பிறந்தால் அது சாதாரணமான பிறப்பு வீதம்.
உதாரணமாக, அதே காலகட்டத்தில் பிரித்தானியர்களுக்கு 3.6 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. 100 பெண் குழந்தைகள் பிறந்த இடத்தில் ஆண் குழந்தைகளோ 105.4 பிறந்துள்ளன. ஆக, அது சாதாரண பிறப்பு வீதம்.
அதன் பொருள் என்னவென்றால், இந்திய வம்சாவளியினர் குழந்தையின் பாலினத்தைப் பார்த்து, அது பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதாக பொருள்!
அப்படி பார்க்கும்போது, 2017க்கும் 2021க்கும் இடையிலான காலகட்டத்தில், இந்திய வம்சாவளியினர், 400 பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
பிரித்தானிய சுகாதார மேம்பாடு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில், இப்படி கருவிலிருப்பது பெண் குழந்தை என்று தெரியவந்தால் அந்தக் கருவை கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதம் என்று கூறியுள்ள சுகாதாரம் மற்றும் சமூக அக்கறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர், அப்படி மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்வது குற்றமாகும் என்றும், அத்தகைய செயல்களை யாரேனும் செய்வது தெரியவந்தால் அது குறித்து பொலிசில் புகாரளிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |