பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் 5.2% ஆக உயர்வு: வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்
பிரித்தானியாவில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வேலையின்மை
பிரித்தானியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கிட்டத்தட்ட 5.2% ஆக உயர்ந்து இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல் படி, கடந்த 2021ம் ஆண்டின் தொடக்கத்திற்கு பிறகு 2025ம் ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவான இதன் மதிப்பு மிகப்பெரிய சரிவை குறிப்பிட்டுள்ளது.

வேலையின்மை மற்றும் ஊதிய வளர்ச்சியின் மந்த நிலை ஆகிய பொருளாதார மாற்றத்தின் காரணமாக “பேங்க் ஆப் இங்கிலாந்து” தன்னுடைய வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிகரிக்கும் தொழிலாளர் செலவு
நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக அந்நாட்டின் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் அறிமுகப்படுத்திய வரி கொள்ளை மற்றும் நிதிக் கொள்கையே காரணம் என்று வணிக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் தேசிய காப்பீட்டு பங்களிப்பு உயர்வு(NICs) போன்றவை நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைத்து கொள்வதற்கான செலவுகளை அதிகரிக்க வைத்துள்ளது.

இதனால் புதிய ஊழியர்கள் நியமனங்களுக்கு நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதுடன், அதிகப்படியான செலவுகளை சுட்டிக்காட்டி பழைய ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களால் நாட்டில் உள்ள 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் வேலையின்மை விகிதம் 14% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது மிகவும் மோசமான நிலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |