சூப்பர் மார்க்கெட் குளிர்சாதன பெட்டிகளை ஹேக்கர்களிடமிருந்து காக்க பிரித்தானிய அரசு ரகசிய நடவடிக்கை
UK Launches Secret Cyber Shield for Supermarkets: சூப்பர் மார்க்கெட் குளிர்சாதன பெட்டிகளை ஹேக்கர்களிடமிருந்து காக்க பிரித்தானிய அரசு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
குளிர்சாதன அமைப்புகள் மீது சைபர் தாக்குதல்
ஐரோப்பா முழுவதும் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவு சேமிப்பு மையங்களின் குளிர்சாதன அமைப்புகள் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உறைபதன கருவிகளை (Freezers) பாதுகாக்க பிரித்தானிய அரசு ரகசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த தாக்குதல்களால் ஐரோப்பிய நாடுகளில் மில்லியன் கணக்கான யூரோ மதிப்பிலான உணவுப் பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரகசிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் செயல்பட்ட ஆயிரக்கணக்கான வணிக குளிர்சாதன கட்டுப்பாட்டு சாதனங்கள் இணையத்திலிருந்து துண்டிக்கப்பட்டன.
சூப்பர் மார்க்கெட்டுகள், கிடங்குகள், உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் இந்த முயற்சியில் பங்கேற்றன.
இந்த பாதுகாப்பு குறைபாடு முதலில் Omega Solutions என்ற பிரித்தானிய குளிர்சாதன ஆலோசனை நிறுவனத்தால் கண்டறியப்பட்டது. பின்னர் Pen Test Partners என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் விசாரணை நடத்தி, மேலும் பல பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது.
இதையடுத்து National Cyber Security Centre (NCSC), பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் மற்றும் உணவுத்துறை அமைப்புகள் இணைந்து வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவின. சில இடங்களில் இணைய கேபிள்கள் நேரடியாக அகற்றப்பட்டு, குளிர்சாதன வெப்பநிலைகள் கையால் கண்காணிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கை ரகசியமாக நடத்தப்பட்டதற்கான காரணம், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஹேக்கர்களுக்கு தகவல் செல்லாமல் தடுப்பதற்காகவே என அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் மூன்று வாரங்கள் இந்த நடவடிக்கை நீடித்ததாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபரில், பிரான்சில் மட்டும் சுமார் 700 சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவு உற்பத்தி மையங்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளாகின.
ஹேக்கர்கள் குளிர்சாதன அமைப்புகளின் வெப்பநிலையை மாற்றியதால் 15 தீ விபத்துகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் பெல்ஜியம், லக்சம்பர்க் உள்ளிட்ட 7 ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற தாக்குதல்கள் பதிவாகின.
சைபர் குற்றவாளிகள் குளிர்சாதன கட்டுப்பாட்டு அமைப்புகளை கைப்பற்றினால், பல இடங்களில் உள்ள உணவுப் பொருட்களின் வெப்பநிலையை மாற்றி பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த முடியும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோக சங்கிலியை காக்கும் நோக்கில் பிரித்தானியா இந்த அவசர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |