3 ஆண்டுகள் ஃப்ரீசரில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் உடல் - பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்
UK Man Hid Roommate's Body In Freezer For Years: பிரித்தானியாவில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான கொலை வழக்கு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 ஆண்டுகள் ஃப்ரீசரில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் உடல்
65 வயதான ஜார்ஜ் கார்டன் என்ற நபர், தண்னுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த தனது நெருங்கிய தோழி, டெலியா மெக்இனெர்னியை (64 வயது) கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவரது உடலை துண்டுகளாக வெட்டி, சுமார் மூன்று ஆண்டுகளாக ஒரு பெரிய உறைவிப்பானில் (freezer) மறைத்து வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை
விசாரணை அறிக்கையின்படி, டெலியா மெக்இனெர்னி 2023 ஏப்ரல் மாதத்தில் போர்ச்சுகலுக்கு குடிபெயர்ந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் காவல்துறையிடம் பேசிய ஜார்ஜ் கார்டன், அதிகளவு மருந்து உட்கொண்டதால் அவர் துன்புற்ற நிலையில் இருந்தார் என்றும், அவரது வேதனையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுத்தியலால் தாக்கியதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவர் தற்காப்புக்காகவே அவ்வாறு செயல்பட்டதாக வாதிட்டுள்ளார்.
மோசடி
கொலை செய்த பின்னர், டெலியாவின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மாற்றிய கார்டன், இணையத்தில் ஒரு பெரிய ஃப்ரீசரை வாங்கியதாகவும், தொடர்ந்து பல ஆண்டுகள் டெலியாவாகவே நடித்து வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவரது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி, அவர் உடல்நலக் குறைவால் வெளியே வர முடியவில்லை என நம்ப வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், டெலியாவின் பெயரில் கடன் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த ஆண்டு ஜனவரியில் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஃப்ரீசருக்குள் டெலியாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
5 கினியா பன்றிகள்
அதே ஃப்ரீசரில் அவர் செல்லப்பிராணியாக வளர்த்துவந்த 5 கினியா பன்றிகளின் உடல்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடலை மறைத்ததை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை மற்றும் விலங்குகளை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டுகளை ஜார்ஜ் கார்டன் தற்போது மறுத்துள்ளார். இந்த வழக்கு பிரித்தானியாவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |