பிரித்தானியாவில் மருத்துவமனைக்குள் நடந்த கலவரம்: 20 வயது இளைஞர் கைது
பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் தாக்குதல்
பிரித்தானியாவில் உள்ள நியூட்டன்-லி-வில்லோஸில் உள்ள நியூட்டன் சமூக மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மதியம் மருத்துவ முன்பதிவு தொடர்பாக பயனாளருக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக வெடித்தது.
மெர்சிசைடு பொலிஸார் வழங்கிய தகவல் படி, மருத்துவ சிகிச்சை கோரி வந்த நபருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த நபர் வரவேற்பு அறையில் இருந்த மேசையை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த நபர்களை ஆயுதத்தால் தாக்க தொடங்கியுள்ளார்.

5 பேர் வரை காயம்
இந்த தாக்குதலில் 5 பேர் வரை காயமடைந்த நிலையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இரும்புக்கம்பியாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் காயமடைந்த எவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞர்
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 20 வயது இளைஞர் ஆப்கானிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்றும், அவர் கைது செய்யப்பட்டு தற்போது மெர்சிசைடு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது திட்டமிட்டு காயப்படுத்துதல், கலவரத்தில் ஈடுபடுதல் மற்றும் பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |