ரஷ்யா போர் தொடுத்தால் படைகளை அனுப்பமாட்டோம்! உக்ரைன் விஷயத்தில் எச்சரிக்கும் பிரித்தானியா
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், பிரித்தானியா மற்றும் நோட்டோ அமைப்பைச் சேர்ந்த நாடுகள் அங்கு படைகளை அனுப்பாது என்று திட்டவட்டமாக பிரித்தானியாவின் பாதுகாப்பு துறை இணையமைச்சர் பென் வாலஸ் கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பாவில் மிகப் பெரிய நாடாக உக்ரைன் உள்ளது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
ஏற்கனவே உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது ஐரோப்பிய நாடான உக்ரைனை முழுமையாக ரஷ்யா கைப்பற்ற நினைப்பதால், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து வருகிறது.
இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யாவை கடுமையாக எச்சரித்துள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா கடுமையான விளைவை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியாவின் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இல்லை.
இதனால், அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால், பிரித்தானியாவோ அல்லது நோட்டோ அமைப்பைச் சேர்ந்த மற்ற நாடுகளோ அங்கு படைகளை அனுப்புவதற்கு வாய்ப்பில்லை.
எனவே, உக்ரைன் மீது போா் தொடுக்க வேண்டாம் என்று ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து, உக்ரைன் மக்களை பாதுகாப்பதில் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக கூறினார்.
கடந்த 1949-ஆம் ஆண்டு, சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.
சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது.
இங்கு சுமாா் 30 சதவீத்தினா் ரஷ்ய மொழி பேசும் மக்கள் உள்ளதால், உக்ரைனில் ஐரோப்பிய செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைனை உறுப்பினராகக் கூடாது என்றும் உக்ரைனில் நேட்டோ நிலைகள் அமைக்கப்படக்கூடாது என்றும் ரஷியா திட்டவட்டமாகக் கூறி வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைன் அரசை எதிா்த்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு போரிட்டனா்.
ரஷ்யா இராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா்.
அப்போது, தான் உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது படையெடுத்த ரஷ்யா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதே போன்று தற்போது உக்ரைனையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.