பிரித்தானியாவில் இனி நிரந்தர புகலிடம் கிடையாது: உள்துறைச் செயலரின் அதிரடி திட்டம்
புலம்பெயர் பின்னணிகொண்டவரான பிரித்தானியாவின் உள்துறைச் செயலர், புலம்பெயர்தலுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
இனி நிரந்தர புகலிடம் கிடையாது
பிரித்தானியாவில் புதிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், பிரித்தானியாவின் எல்லைகளைப் பாதுகாக்க, என்னாலியன்ற அனைத்தையும் செய்வேன் என உறுதியளித்துள்ளேன், அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறுவது வழக்கம்.

அவர் சொன்னதுபோலவே, புலம்பெயர்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் ஷபானா. அவ்வகையில், அவர் அடுத்து குறிவைத்துள்ளது புகலிடக்கோரிக்கையாளர்களை!
ஆம், பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் இனி தற்காலிகமாக மட்டுமே பிரித்தானியாவில் தங்க அனுமதிக்கப்படும் வகையில் கொள்கைகளை மாற்ற திட்டமிட்டுவருகிறார் ஷபானா.
தற்போது, பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் ஐந்து ஆண்டுகள் அகதி நிலையில் நீடிக்கலாம். அதற்குப் பிறகு காலவரையறையின்றி பிரித்தானியாவில் தங்க விண்ணப்பிக்கலாம். அதற்குப் பின் பிரித்தானியக் குடியுரிமை பெறும் முயற்சிகளைத் துவங்கலாம்.
ஆனால், ஷபானாவின் திட்டப்படி, இனி அப்படி இருக்கப்போவதில்லை. பிரித்தானியாவில் புகலிடம் கோரி வந்தவர்கள், அவர்களுடைய நாட்டில் நிலைமை சீரடைந்துவிட்டால், அதாவது, அவர்கள் நாடு பாதுகாப்பானது என கண்டறியப்படும் நிலையில், அவர்கள் தங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதுதான் ஷபானாவின் திட்டம்.
விடயம் என்னவென்றால், பிரித்தானியாவில் குடியமர்ந்துள்ள புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களே, தாங்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வரும்போது, புலம்பெயர்தலுக்கு எதிராக நடந்துகொள்கிறார்கள்.

முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் போன்றவர்களை அதற்கு உதாரணமாகக் கூறலாம்.
பிரித்தானியாவின் தற்போதைய உள்துறைச் செயலரான ஷபானாவும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான். அவரது பெற்றோர் பாகிஸ்தான் பின்னணி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |