கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு
கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் கிரீன்லாந்து விவகாரம்
டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒற்றை பகுதி என அறிவித்து அவற்றை அதிகாரப்பூர்வமாக இணைக்கும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறங்கியுள்ளார்.

இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதுடன் பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அமெரிக்காவின் முன் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது பிப்ரவரி 1ம் திகதி முதல் 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஜூன் 1ம் திகதி முதல் இந்த வரி 25% ஆக உயர்த்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு பட்டியலில் பிரித்தானியா, டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
பிரித்தானியா திட்டவட்டம்
கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் நேட்டோ(NATO) உறுப்பு நாடுகள் மீது டிரம்ப் புதிய வரிகளை அறிவித்து இருப்பது முற்றிலும் தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து டென்மார்க் நாட்டின் ஒரு பகுதி, கிரீன்லாந்து நாட்டின் எதிர்காலத்தை கிரீன்லாந்து மக்களும் டென்மார்க் மட்டும் தான் தீர்மானிக்க முடியும் என பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்க்டிக் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நேட்டோ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமே தவிர, அமெரிக்கா நிலத்தை கையகப்படுத்த நினைக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |