உணவுப்பொருட்கள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளத் தயாராகும் பிரித்தானியா: ரகசிய ஆய்வு
மத்திய கிழக்கு மோதல் தொடர்ந்தால், வரும் மாதங்களில் பிரித்தானியர்கள் சில உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடலாம் என்று அரசாங்கத்தின் ரகசிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் சூழல்
ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து, ஈரானாலும் அமெரிக்க கடற்படையாலும் தடுக்கப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தம் ஏப்ரல் 22ஆம் திகதியுடன் முடிவடைகிறது. மீண்டும் மோதல்கள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதிகள், பாபா அல் மண்டேப் ஜலசந்தியிலும் கப்பல் போக்குவரத்தை தடுக்க முயற்சிக்கக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது.
உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படலாம்
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், உணவுத் துறைக்கு இன்றியமையாத கார்பன் டை ஆக்சைடுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கோழிக்கறி முதலான சில உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், கடைகளில் கிடைக்கும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசின் ரகசிய ஆய்வு
இந்நிலையில், டர்ன்ஸ்டோன் சோதனை (Exercise Turnstone) என்னும் பெயரில், ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படவில்லை என்றால் பிரித்தானிய தொழில்துறையில் என்ன விதமான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து, பிரதமர் இல்லம், கருவூலம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் பல்வேறு சூழ்நிலைகளை ரகசியமாக ஒத்திகை பார்த்துள்ளதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கார்பன் டை ஆக்சைடின் முக்கியத்துவம் உணவுப்பொருட்களின் சேமிப்புக் காலத்தை அதிகரிக்க கார்பன் டை ஆக்சைடு பயன்படுத்தப்படுவதால் , விவசாயம் மற்றும் விருந்தோம்பல் தொழில்கள் மிக விரைவாகவும் கடுமையாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அத்துடன் பானங்களை நுரைக்கச் செய்ய இந்த வாயு பயன்படுத்தப்படுவதால், மதுபான ஆலைகளும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |