ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு
ஜனாதிபதி ட்ரம்ப் அரசு முறை பயணத்தை முடித்து பிரித்தானியாவில் இருந்து வெளியேறியதும், பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் முடிவை பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அங்கீகரிக்கத் திட்டம்
காஸாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்த இஸ்ரேல் தொடர்ச்சியான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், இந்த மாதம் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக, பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் முன்னர் கூறியிருந்தார்.
தற்போது பாலஸ்தீன தேசம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவிருந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்புடனான ஊடக சந்திப்பு கண்டுகொள்ளப்படாமல் போகலாம் என்பதால், வார இறுதியில் அறிவிப்பை வெளியிடுவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க அமெரிக்கா மறுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் பிரதமர் ஸ்டார்மர் முரண்படுகிறார்.
இருப்பினும் பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ஐ.நா. மன்றத்தில் உத்தியோகப்பூர்வ நடவடிக்கைகள் முன்னெடுக்க பிரித்தானியாவும் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை, காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐ.நா. ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் நிபந்தனை
முன்னதாக, லேபர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் நெருக்கடியைத் தொடர்ந்து ஜூலை மாதமே பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவிக்க பிரதமர் ஸ்டார்மர் முடிவு செய்திருந்தார்.
ஆனால், பிரித்தானியாவின் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் உடன்படும் என்றால், தங்கள் முடிவை கைவிடவும் தயார் என ஸ்டார்மர் குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானியா முன்வைத்த போர்நிறுத்தத்திற்கு உறுதியளிப்பது, அமைதிக்கான இரு நாடுகள் தீர்வு, மற்றும் மேற்குக் கரையை இணைப்பதை கைவிடுவது ஆகிய மூன்று நிபந்தனைகளையும் இஸ்ரேல் ஏற்கவில்லை மட்டுமின்றி எதிர்ப்பும் தெரிவித்தது.
இந்த நிலையிலேயே ஸ்டார்மர் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |