பிரித்தானியாவில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நபர்கள்: தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
UK severe weather: Rescue team stop missing man searching: பிரித்தானியாவில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நபரை தேடும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்
பிரித்தானியாவில் பல பகுதிகளில் சக்திவாய்ந்த காற்றும், ஆபத்தான கடல் அலைகளும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
ஐல் ஆஃப் வைட் என்ற பகுதியில் உள்ள லேக் கடற்கரையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணை நீரில் இருந்து வெளியே மீட்டனர்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
தேடுதல் பணி நிறுத்தம்
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை வடக்கு அயர்ஷயரின் லார்க்ஸ்(Largs) கடற்கரை அருகே நள்ளிரவில் உருவான ராட்சத அலை ஒன்றில் நபர் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பிரித்தானியாவில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அந்த நபரை தேடும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடலில் இழுத்து செல்லப்பட்ட நபரை தேடும் பணியில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள், RNLI உயிர் காக்கும் படகுகள் ஈடுபடுத்தப்பட்டன.