இக்கட்டான சூழ்நிலையில் அவுஸ்திரேலியா; உதவிக்கரம் நீட்டும் பிரித்தானியா!
பிரித்தானிய அரசாங்கம் அவுஸ்திரேலியாகிவுக்கு உடனடியாக நான்கு மில்லியன் கோவிட் தடுப்பூசிகளை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தீவிரமாக பரவிவரும் டெல்டா வகை கொரோனா தோற்றால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் பல முக்கிய நகரங்கள் மற்றும் மாகாணங்களில் முழு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருகிறது. இதனால் அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சீராக வழங்கப்படுகிறது, ஆனால் தடுப்பூசியால் இரத்தக் கட்டு, இருதய கோளாறு என பல பக்க விளைவுகள் குறித்த செய்திகள் பரவியதால், பலரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாகிவுக்கு உடனடியாக நான்கு மில்லியன் 'பைசர்' கோவிட் தடுப்பூசிகளை அனுப்ப பிரித்தானியஅரசு ஒப்புக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசிகள் செப்டம்பர் 4-ஆம் திகதி அனுப்பப்படவுள்ளன.
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 40 விழுக்காடு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 80% மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவுடன் மாநிலங்களில ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரலாம் அவுஸ்திரேலிய அரசாங்கம் நம்புகிறது.