புகலிடக்கோரிக்கையாளர்களை குறிவைத்து பிரித்தானியா எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானியா தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவருவதாக சமீபத்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்திருந்தார்.
அவர் குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஒன்று, புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவில் வேலை செய்யவிடாமல் தடுப்பதாகும்.
பிரித்தானியா எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள்
ஆம், புகலிடம் கோரி பிரித்தானியாவுக்கு வந்து, அரசு வழங்கும் ஹொட்டல்களில், அரசின் உதவி பெற்று தங்கியிருப்போர், Deliveroo, Just East மற்றும் Uber Eats போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் வேலை செய்துவருவது சமீபத்தில் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, புகலிடக்கோரிக்கையாளர்கள் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்யவிடாமல் தடுக்க உள்துறை அலுவலகம் கடும் நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது.
ரெய்டுகள் நடத்தி, உணவு டெலிவரி செய்யும் புகலிடக்கோரிக்கையாளர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
மேலும், புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் இடங்களின் முகவரிகளை உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்குக் கொடுத்து, அந்த முகவரியில் வாழ்வோருக்கு வேலை கொடுக்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவும் நிறுவனங்களுக்கு 60,000 பவுண்டுகள் அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவரை வேலைக்கு அமர்த்திய மார்க் (Mark Sullivan) என்னும் பிரித்தானியர் ஒருவருக்கு இலங்கை மதிப்பில் 1,63,23,640.00 ரூபாய் (40,000 பவுண்டுகள்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
21 நாட்களுக்குள் அபராதம் செலுத்த சம்மதித்தால், 30 சதவிகிதம் தள்ளுபடி செய்தி 28,000 பவுண்டுகள் மட்டுமே செலுத்தலாம் என்றும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தால் அவர் 80,000 பவுண்டுகள் வரை செலவிடநேரிடும் என்றும் சட்டத்தரணி ஒருவர் ஆலோசனை கூறியதைத் தொடர்ந்து, அபராதம் செலுத்த சம்மதித்துள்ளார் மார்க்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |