இந்திய வம்சாவளி முதியவரை மிதித்தே கொன்ற பிரித்தானிய சிறுவர்கள்: நீதிமன்றத்தின் முடிவு
இந்திய வம்சாவளியினரான 80 வயது முதியவர் ஒருவர் சில பிரித்தானிய சிறுவர்களால் மிதித்தே கொல்லப்பட்ட வழக்கில், இரண்டு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
முதியவரை மிதித்தே கொன்ற சிறுவர்கள்
2024ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, இங்கிலாந்தின் Leicester நகரில், தன் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தார் பீம் சென் கோலி (Bhim Sen Kohli, 80) என்னும் இந்திய வம்சாவளியினரான முதியவர்.
பூங்கா ஒன்றிற்கு அருகே நடந்து சென்றுகொண்டிருந்த கோலியை, திடீரென ஒரு கூட்டம் சிறுவர்கள் சேர்ந்துகொண்டு கொடூரமாக தாக்கினார்கள்.
ஐந்து சிறுவர்கள் கோலியை சூழ்ந்துகொண்டு, அவரை மிதித்துக் கீழே தள்ளி, அவரது கழுத்திலும் முதுகெலும்பிலும் மாறி மாறி மிதித்துள்ளார்கள்.
அந்த சிறுவர்கள் குற்றுயிராக கோலியை விட்டு விட்டு ஓட்டம் பிடிக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோலி, கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துவிட்டார்.
கோலி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை முன்னர் நடத்திவந்துள்ளார்.
நீதிமன்றத்தின் முடிவு
கோலி கொல்லப்பட்ட வழக்கில், தற்போது 14 வயது சிறுவன் ஒருவனும், 12 வயது சிறுமி ஒருத்தியும் குற்றவாளிகள் என Leicester நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அந்த சிறுவன் கோலியை தனது ஷூவால் முகத்தில் பலமாக அடிக்க, அந்தச் சிறுமி அதை வீடியோ எடுத்ததுடன், சத்தமாக சிரித்தவண்ணம், மேலும் அவரை அடிக்குமாறு அந்த சிறுவனை உற்சாகப்படுத்தியுள்ளாள்.
அவள் எடுத்த வீடியோவே அவர்கள் இருவரது குற்றங்களுக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது.
மேலும், CCTV கமெரா காட்சிகளிலும், கோலியை தாக்கிவிட்டு, அதைக் குறித்து பேசி அவர்கள் கேலி செய்து சிரிக்கும் காட்சிகளும் பொலிசாருக்குக் கிடைத்துள்ளன.
அந்தச் சிறுவன், கோலியை இனரீதியாகவும் விமர்சித்துள்ளான். ஆக, கோலியின் மரணத்துக்கு, அந்த சிறுவனும் சிறுமியும்தான் காரணம் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |