ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு
டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தை மொத்தமாக உலுக்கிய நிலையில், 8,000 அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதிக்க இருப்பதாக பிரித்தானியா மிரட்டல் விடுத்துள்ளது.
ட்ரம்புடன் ஒப்பந்தம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஒற்றை முடிவால் பங்குச் சந்தைகளில் இருந்து 2.2 டிரில்லியன் டொலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கோவிட் பெரும்தொற்றுக்குப் பிறகு நாஸ்டாக் அதன் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
பிரித்தானியப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இன்னும் ஜனாதிபதி ட்ரம்புடன் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க முடியும் என நம்புகிறார். ட்ரம்பின் அதிரடி முடிவால் பல நாடுகளின் அரசாங்கங்கள் அமெரிக்க இறக்குமதிகள் மீது வரி விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவதே தனது முன்னுரிமை என்று பிரதமர் ஸ்டார்மர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதனால் பிரித்தானியாவின் அனைத்து ஏற்றுமதிகளுக்கும் விதிக்கப்படும் பத்து சதவீத வரியைக் குறைக்க அல்லது நீக்க முடியும் என்றே நம்பப்படுகிறது.
ஆனால் மே 1ம் திகதிக்குள் ஒப்பந்தம் ஒன்று முடிவாகவில்லை என்றால், அமெரிக்காவின் 8,000 பொருட்கள் மீது வரி விதிக்க ஸ்டார்மர் அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது. 417 பக்கம் கொண்ட பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள், ஜாக் டேனியல் மற்றும் ஜிம் பீம் விஸ்கி மற்றும் லெவியின் ஜீன்ஸ் ஆகியவற்றுடன் கழிப்பறை இருக்கைகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் வளர்ச்சி
இருப்பினும், ஒரு வர்த்தகப் போருக்கு பிரித்தானியா தற்போது தயாரல்ல என்பதையும் ஸ்டார்மர் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பிரதமர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், தேசிய நலனுக்காக தாம் செயல்பட வேண்டும் என்றும் பழிவாங்கும் நடவடிக்கையில் குதிப்பதா இல்லையா என்பதுதான் நம் முன் உள்ள தெரிவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அல்லது, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுப்பது என தெரிவித்துள்ளார். ட்ரம்பின் முடிவால் பிரான்சின் CAC 40 பங்குச்சந்தை 3.3 சதவீத சரிவுடன் முடிவடைந்தது. ஜேர்மனியின் DAX சுமார் 3 சதவீத சரிவை எதிர்கொண்டது.
அத்துடன் adidas நிறுவன பங்குகள் 12 சதவீதம் வரையில் சரிவடைந்தது. நைக் மற்றும் பூமா கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. நாஸ்டாக் 5.3 சதவீதம் சரிவடைந்தது. ஆப்பிள் பங்குகள் கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் சரிவடைந்து, அதன் சந்தை மதிப்பில் இருந்து 250 பில்லியன் டொலர்களை இழந்தது.
இந்த நிலையில், பிரித்தானியாவின் வாகன சந்தையில் ட்ரம்பின் 25 சதவீத வரி விதிப்பால் 25,000 வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் ஆண்டுகளில் பிரித்தானியாவின் வளர்ச்சி 0.5 சதவீதம் அளவுக்கு குறையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |