சீனாவை அதிகமாக சார்ந்திருக்கும் பிரித்தானியா - ஆபத்தில் பாதுகாப்பு, AI, ஆற்றல் துறைகள்
UK Warned Over Heavy Dependence on China Minerals: பிரித்தானியா முக்கிய துறைகளில் சீனாவை அதிகமாக சார்ந்திருக்கிறது.
சீனாவை அபாயகரமான அளவில் சார்ந்துள்ள பிரித்தானியா
பாதுகாப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு தேவையான முக்கிய கனிம வளங்களுக்காக பிரித்தானியா சீனாவை 'அபாயகரமான அளவில்' சார்ந்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற விசாரணை அறிக்கை எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவின் வணிகத் தேர்வுக்குழு (Business Select Committee) நடத்திய ஆய்வில், இராணுவ விமானங்கள், மின்சார வாகனங்கள், AI தரவுமையங்கள் மற்றும் காற்றாலை தொழில்நுட்பங்களுக்கு அவசியமான அரிய நிலக்கனிமங்கள் (Rare Earths) மற்றும் லித்தியம் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் விநியோகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவர் லியம் பயர்ன், "முக்கிய கனிமங்களே புதிய பொருளாதாரத்தின் அடித்தளம். இவற்றின் விநியோகத்தை உறுதி செய்யாமல் பிரித்தானியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், AI வளர்ச்சியை முன்னேற்றவும் அல்லது நெட்-சீரோ இலக்கை அடையவும் முடியாது" என்று கூறியுள்ளார்.
மேலும், சீனாவின் ஆதிக்கம் நீடித்துக்கொண்டிருக்கும்போது பிரித்தானியா இன்னும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஆய்வின்படி, கனிமங்களைச் சுரங்கங்களில் இருந்து எடுப்பதை விட அவற்றை சுத்திகரித்து பயன்பாட்டுக்கு தயார்படுத்தும் செயல்முறையில்தான் பெரிய சிக்கல் உள்ளது. அந்த துறையில் சீனா ஏழு முக்கிய கனிமப் பிரிவுகளில் முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக மின்சார வாகனங்களுக்கு தேவைப்படும் சுத்திகரிக்கப்பட்ட லித்தியம் மற்றும் இராணுவ விமானங்களில் பயன்படுத்தப்படும் அரிய கனிமங்களின் விநியோகத்தில் சீனாவின் பிடி மிகவும் வலுவாக உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் லித்தியத்திற்கான உலகளாவிய தேவை 45 மடங்கும், அரிய நிலக்கனிமங்களுக்கான தேவை 16 மடங்கும் அதிகரிக்கும் என எம்.பி.க்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த சூழலில், சீனா ஏற்றுமதியை கட்டுப்படுத்தினால் அது பிரித்தானிய பொருளாதாரத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முக்கிய கனிமத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் தனிப்பட்ட நிதி அமைப்பை உருவாக்கவும், புதிய சுரங்கத் திட்டங்களில் முதலீட்டை அதிகரிக்கவும், மாற்று விநியோக நாடுகளுடன் இணைந்து செயல்படவும் நாடாளுமன்றக் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |