முடங்கிப் போனதாக பொய் கூறி ரூ.30 லட்சம் மோசடி: சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணுக்கு தண்டனை
பிரித்தானியாவில் மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் உதவித் தொகையை தவறாக பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்ட பிரித்தானிய பெண்
பிரித்தானியாவை சேர்ந்த 33 வயது கேத்தரின் வீலண்ட(Catherine Wieland) என்ற பெண் தனக்கு மனநல பாதிப்புகள் இருப்பதாகவும், இதனால வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக இருப்பதாகவும் பொய் கூறி தனிநபர் சுதந்திரக் கொடுப்பனவு(PIP) திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 23,000 பவுண்டுகளை பெற்றுள்ளார்.
அத்துடன் பிரித்தானிய அரசின் கூடுதல் நிதியுதவியுடன் மொபிலிட்டி திட்டத்தின் கீழ் கார் ஒன்றையும் கத்தரின் பெற்றுள்ளார்.
ஆனால், பின்னர் அவர் அந்த மாற்றுத்திறனாளி உதவித்தொகையை தவறாக பயன்படுத்தி தனது மகனுடன் மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேத்தரின் சமூக வலைத்தள பக்கத்தை ஆராய்ந்த அதிகாரிகள், அவர் மெக்சிகோவில் ஜிப்லைனிங் செய்த புகைப்படங்கள், பக்கி(Buggy) வாகனம் ஓட்டிய வீடியோக்கள், மற்றும் பிரித்தானியாவில் உள்ள பல மதுபான விடுதிகளில் உற்சாகமாக பங்கேற்றது ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.
நீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில் கேத்தரின் வீலண்ட எதிராக தொடரப்பட்ட வழக்கு லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் கேத்தரின் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
அவருக்கு ஆரம்பத்தில் மனநல பாதிப்புகள் இருந்தாலும், பின்னர் அவர் அதை பணத்திற்காக பொய்யாக கூறியுள்ளார் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கத்தரினுக்கு தற்போது 28 வாரங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த சிறைத்தண்டனை 18 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கத்தரின் மறுவாழ்வு முகாம்களில் கட்டாயாமாக பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |