2500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்திச் சென்ற ரஷ்யா! உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷ்ய படைகள் குழந்தைகளை கடத்திச் செல்வதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 26வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியிலிருந்து குழந்தைகளை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸிலிருந்து சுமார் 2,389 குழந்தைகள் சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறுவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, மரியுபோல் நகர மக்களை பாஸ்போர்ட் இன்றி, ரஷ்யா படைகள் தங்கள் நாட்டிற்கு கடத்திச் செல்வதாக உக்ரைன் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இதுவரை 3 உக்ரைன் மேயர்களை ரஷ்யா கடத்தியுள்ளது.
சமீபத்தில், சிறைபிடிக்கப்பட்ட 9 ரஷ்ய வீரர்களை உக்ரைன் திருப்பி அனுப்பிய பின், கடத்தப்பட்ட மேயர்களில் ஒருவரான மெலிட்டோ போல் நகர மேயர் இவான் பெடோரோவை ரஷ்யா விடுவித்தது குறிப்பிடத்தக்கது.