ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த திட்டம்! உக்ரைன் தலைநகரில் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை
உக்ரைன் தலைநகரில் குழப்பமான போர் தகவலால் பொதுமக்கள் பெரும் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்தனர்.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்யா இரண்டு வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டின் தலைநகர் கீவில் இருக்கும் மக்களுக்கு, உக்ரைன் அதிகாரிகள், நேற்று வானொலி வாயிலாக எச்சரிக்கை வெளியிட்டனர்.
அப்போது, ரஷ்ய படையினர், தலைநகர் கீவில் ஏவுகணைகளை வீசி வான்வழி தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,சுரங்கங்களில் தஞ்சமடைந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டது.
இந்த அறிவிப்பால், கீவில் பதற்றம் அதிகரித்தது. எனினும், அடுத்த சில மணி நேரங்களில், அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இதற்கிடையே, கீவ் பிராந்திய நிர்வாக தலைவர் ஒலெக்சி குலேபா கூறுகையில், கீவ் நகரில், ரஷ்ய படையினர் மக்கள் மீது நடத்தும் தாக்குதல் அதிகரித்துள்ளன.
குறிப்பாக புறநகர் பகுதியில், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என கூறியுள்ளார். இந்த குழப்பமான தகவல்களை மக்களை பீதியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இருநாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வருமா, இல்லையா என்பது, அடுத்த சில நாட்களில் தெரியவரும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்