நடுவானில் எரிந்து விழுந்த உக்ரைனிய விமானத்தில் இருந்தது என்ன? வெளிவந்த முக்கிய தகவல்கள்
கிரீஸில் விழுந்து வெடித்துச்சிதறிய உக்ரனுக்கு சொந்தமான சரக்கு விமானத்தில் 12 டன் வெடிமருந்துகள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
உக்ரைன் நிறுவனத்திற்கு சொந்தமான Antonov-12BK ரக சரக்கு விமானம் செர்பியாவிலிருந்து ஜோர்டானுக்கு பயணித்துக்கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் அருகிலுள்ள கவாலா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரியது.
ஆனால் கவாலா சென்றடைவதற்குள் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில், இரண்டு கிராமங்களுக்கு இடையே உள்ள வயல்வெளியில் விழுந்து வெடித்தது.
விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, உக்ரேனிய சரக்கு கேரியர் மெரிடியனால் இயக்கப்பட்ட சோவியத் கால விமானத்தின் பைலட், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களிடம் எஞ்சின் ஒன்றில் சிக்கல் இருப்பதாகவும், அவசரமாக தரையிறக்க வேண்டியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், விழுந்த வேகத்தில் தரையில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. முற்றிலுமாக எரிந்து சாம்பலான இந்த விமானத்தில் சிறிய துண்டுகள் மட்டுமே எஞ்சியிருந்ததை ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன.
விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன, ஆனால் வெடிப்புகள் நடந்து கொண்டிருப்பதால் அவர்களால் நெருங்க முடியவில்லை.
ஏனெனில், அதில் 12 டன் எடையுள்ள அபாயகரமான பொருட்கள், பெரும்பாலும் வெடிபொருட்கள் இருந்ததாகவும் கிரேக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், விமானம் விழுந்து இரண்டு மணிநேரத்திற்கு பிறகும் வெடித்துக்கொண்டிருந்தது.
விமானத்தில் 8 பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் புகை மற்றும் கடுமையான துர்நாற்றம் காரணமாக விபத்து நடந்த இடத்தை யாரும் நெருங்கவிடாமல் தடுத்தனர்.
கிராம மக்கள் இரவு முழுவதும் ஜன்னல்களை மூடி வைக்கவும், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், முகமூடி அணியவும் அறிவுறுத்தப்பட்டனர்.
Images: Reuters