உக்ரைனில் புதைக்கப்பட்ட 70% க்கும் அதிகமான கண்ணிவெடிகள் அகற்றம்! FSD அறிக்கை
உக்ரைன் கண்ணிவெடிகளை அகற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் கண்ணிவெடி அகற்றம்
உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதைந்துள்ள ஆட்கொல்லி கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடி பொருட்களை அகற்றும் பணியில் மகத்தான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் கண்ணிவெடி நடவடிக்கைக்கான அறக்கட்டளை (FSD) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, தற்போது அணுகக்கூடிய நிலப்பரப்பில் 70% க்கும் அதிகமான பகுதிகள் கண்ணிவெடி அபாயம் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளன என தெரியவந்துள்ளது.
சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு மற்றும் கண்ணிவெடி நடவடிக்கைகளுக்கான உதவி தினத்தை முன்னிட்டு இந்த தகவலை வெளியிட்ட FSD, மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 120 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கண்ணிவெடிகளுக்காக ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
FSD மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் அயராத உழைப்பால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.
இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலம் மீண்டும் விவசாயம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
FSD இதுவரை செர்னிஹிவ், கார்கிவ், டொனெட்ஸ்க் மற்றும் கெர்சன் ஆகிய முக்கிய பிராந்தியங்களில் 2.5 சதுர கிலோ மீட்டர் நிலத்தை கண்ணிவெடிகளில் இருந்து விடுவித்துள்ளது.
மேலும், அவர்களின் கண்ணிவெடி அபாய விழிப்புணர்வு திட்டங்களின் மூலம் சுமார் 400,000 தனிநபர்கள் ஆபத்தான கண்ணிவெடிகள் மற்றும் வெடி பொருட்களை அடையாளம் காணும் திறனைப் பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |