ரஷ்யாவை சூழ்ந்த 100 உக்ரைனிய ட்ரோன்கள்: தொடரும் உக்ரைன்-ரஷ்யா மோதல்!
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்திற்கான முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் துருக்கியில் முதன்முறையாக நேரடிப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எனினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்த போதும், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மோதல்களின் தொடர்ச்சி
சமீபத்தில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்குப் பதிலடியாக, உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பெரும் அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை உக்ரைன் மீண்டும் ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியது. குறிப்பாக, மாஸ்கோ நகரையே இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ரஷ்யாவின் பதில் தாக்குதல்
உக்ரைன் அனுப்பிய டிரோன்களை ரஷ்யப் பாதுகாப்புப் படைகள் நடுவானிலேயே இடைமறித்து அழித்தன.
இது குறித்து ரஷியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 உக்ரைன் டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நான்கு மணி நேரத்திற்குள் 95 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
மேலும், மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட டிரோன்களும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.
மத்திய நகரமான துலா மற்றும் மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ட்வெர் நகரிலும் வான் பாதுகாப்பு பிரிவுகள் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியானது.
மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான், தலைநகருக்கு அருகில் 11 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |