ரஷ்யாவின் முக்கிய நகரில் ட்ரோன் தாக்குதல்: மூவர் பலி, 25 பேர் காயம்
ரஷ்ய நகரமான பெல்கோரோட் மீது உக்ரைன் இரவு நேர ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் பெல்கோரோட் நகரின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூவர் பலியாகினர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
ட்ரோன் தாக்குதல்
பெல்கோரோட் பிராந்தியத்தில், உக்ரைன் நடத்திய இரவு நேர ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய தற்காலிக ஆளுநரான அலெக்சாண்டர் ஷுவாயேவ், "இந்தத் தாக்குதலால் இரண்டு அடுக்குமாடிக் கட்டிடங்களில் தீப்பிடித்தன. பின்னர் அவை அவசரகால சேவைகளால் அணைக்கப்பட்டது. ஏராளமான குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள் சேதமடைந்தன" என தெரிவித்தார்.
இதற்கிடையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், நாட்டின் ஐரோப்பியப் பகுதி இணைக்கப்பட்ட கிரிமியா, கருங்கடல் மற்றும் அசோவ் கடல் ஆகியவற்றின் மீது பறந்த 150-க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன் விமானங்களை அழித்ததாகக் கூறியது.
மேலும், பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியத்தில் உள்ள உஃபா நகரில், கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடம் மற்றும் ஒரு கிரேனை உக்ரேனிய ட்ரோன் விமானம் தாக்கியதாக, உள்ளூர் அவசர சேவைகளை மேற்கோள்காட்டி அரசுக்கு சொந்தமான RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |