இரவில் அத்துமீறிய உக்ரைன்: 150 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
ரஷ்யாவில் ஒரே இரவில் 150க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதல்
இரவில் ரஷ்ய வான்வெளியை சுற்றி வளைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் பல்வேறு நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏவப்பட்ட கிட்டத்தட்ட 151 உக்ரைனிய ட்ரோன்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11ம் திகதி மாலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வான்வெளி தாக்குதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை மற்றும் மேற்கு பகுதிகளான பெல்கொரோட், பிரையான்ஸ்க், குர்ஸ்க் மற்றும் ரோஸ்டோவ் ஆகிய நகரங்களிலும், மத்திய மண்டலங்களான ஸ்மோலென்ஸ்க், டவெர், துலா ஆகிய பகுதிகளிலும் அத்துமீறிய உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் கடல் மற்றும் தீபகற்ப பகுதிகளான கிரிமியா மற்றும் கருங்கடல் பகுதியிலும் ஏவப்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.