ரஷ்யாவின் உட்பகுதிக்குள் உக்ரைன் நடத்திய வேட்டை: 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: 8 பேர் பலி
ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் ஆழமான பகுதிகளை குறிவைத்து உக்ரைன் அதிரடியான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ராணுவத்தின் நிலைகள், பொது மக்கள் குடியிருப்பு மற்றும் எரிசக்தி நிலையங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன.
உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி ரஷ்யாவில் இதுவரை 8 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கல்ஸ் பகுதியின் குடியிருப்பு பகுதி மீது ட்ரோன் மோதியதில் 2 பேரும், சரடோவ் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு மீது ட்ரோன் மோதியதில் பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கிட்டத்தட்ட உக்ரைனில் இருந்து 1300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.
பெல்கோரரோட் பகுதியில் ட்ரோன் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உக்ரைனிய படையின் இந்த ஒருங்கிணைந்த ட்ரோன் தாக்குதலை ரஷ்ய பாதுகாப்பு படைகள் முழுவீச்சில் தடுத்து நிறுத்தினர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, கிட்டத்தட்ட 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி உள்ளது.
உறுதிப்படுத்திய ஜெலென்ஸ்கி
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யா மீது நடத்தப்பட்ட பிரம்மாண்ட தாக்குதலை உறுதிப்படுத்தினார்.

மேலும் சரடோவ் நகரில் அமைந்திருந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளையும், எங்கல்ஸில் உள்ள ரஷ்யாவின் ராணுவ தளத்தையும் உக்ரைனிய படைகள் வெற்றிகரமாக தாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் தொடர் அத்துமீறலுக்கு உக்ரைனின் நேரடி பதிலடி தான் இந்த நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |