ட்ரோன்களுக்கு நிதி திரட்ட போர்னோகிராபியை சட்டபூர்வமாக்கும் உக்ரைன்
உக்ரைன் நாடாளுமன்றத்தில், போர்னோகிராபியை (ஆபாச வீடியோ) சட்டபூர்வமாக்கும் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டின் அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையை சட்டப்பூர்வமாக்கி, வரி வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற நிதி குழுத் தலைவர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக், இந்தத் துறையை சட்டப்பூர்வமாக்கினால், 25 மில்லியன் டொலர் வரி வருவாய் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளார். அந்த தொகை, உக்ரைன் போருக்காக 30,000 ட்ரோன்கள் வாங்க போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, உக்ரைனில் போர்னோகிராபி தயாரித்தல், வைத்திருத்தல், பகிர்தல் அனைத்தும் சட்டவிரோதமாகும். இதற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இருந்தாலும், இந்தத் துறை குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் ஊழல் உதவியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
2023-ஆம் ஆண்டு, 7,900 உக்ரைனியர்கள் OnlyFans மூலம் 131 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வரி செலுத்தியவர்கள் கூட பார்ன் வீடியோ சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதால், பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
OnlyFans படைப்பாளர் ஸ்விட்லானா ட்வோர்னிகோவா, “நான் 9 லட்சம் டொலர் வரி செலுத்தியுள்ளேன். அதற்குப் பிறகும் என்னை குற்றவாளியாக நடத்துவது தவறு” எனக் கூறி, ஜெலென்ஸ்கி இணையதளத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு ஒரு வாரத்தில் 25,000 கையெழுத்துகள் கிடைத்தன.
இதையடுத்து, ஜெலென்ஸ்கி அரசு, போர்னோகிராபி சட்டபூர்வமாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜூலை மாதத்தில், இந்த மசோதா முதல் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டு, தற்போது இரண்டாவது வாசிப்புக்காக காத்திருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |