டிரம்ப்-புடின் சந்திப்பு: பேச்சுவார்த்தையில் உக்ரைன் நிச்சயம் இருக்க வேண்டும்! ஐரோப்பிய நாடுகள் உறுதி
புடின்-டிரம்ப் சந்திப்பின் போது நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
டிரம்ப்-புடின் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்ததிற்கான மத்தியஸ்தத்தை செய்து வருகிறார்.
இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஏற்கனவே அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த வாரம் அலாஸ்காவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதையடுத்து இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்த ஜெலென்ஸ்கி, உக்ரைன் இல்லாமல் எடுக்கும் எந்தவொரு முடிவு எதையும் சாதிக்காது எனவும், அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
உறுதிப்படுத்திய ஐரோப்பிய நாடுகள்
ஜெலென்ஸ்கியின் அறிவிப்பை தொடர்ந்து, பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனின் கோரிக்கையை ஆதரித்துள்ளனர்.
இது குறித்து பிரித்தானியா, இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து,பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்கள் ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்களிப்பு இல்லாமல் எந்தவொரு பலனும் இருக்காது என ஜெலென்ஸ்கியின் கருத்தை பிரதிபலித்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தன்னுடைய X தள பதிவில், “ஐரோப்பிய நாட்டு மக்களின் பாதுகாப்பில் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. எனவே அவர்களும் அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பங்காக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை தொடர்ந்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |