உக்ரைனில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பீரங்கி தாக்குதல் நடத்தும் ரஷ்யா! அதிர்ச்சியூட்டும் சாட்டிலைட் புகைப்படங்கள்
ரஷ்ய இராணுவம் உக்ரைன் நகரங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பீரங்கி தாக்குதல்கள் நடத்தும் திடுக்கிடும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா மூன்றாவது வாரமாக உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் நிலையில், தலைநகர் கீவை நாளுக்கு நாள் நெருங்கி வருகிறது. மேலும், உக்ரைனின் பல நகரங்களில் நேற்று முதல் முறையாக தாக்குதலை தொடங்கியுள்ளது ரஷ்யா.
இந்நிலையில், Kyiv, Ozera, Moschun ஆகிய நகரங்களில் ரஷ்ய பீரங்கிகள் குடியிருப்பு பகுதிகளில் கூடுகளை வீசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தனியார் நிறுவனமான Maxar Technologies இந்த செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டனர்.
புகைப்படங்களில், வீடுகள் பற்றி எரிவதை காணமுடியும், குடியிருப்பு பகுதிகள் முழுக்க புகைமூட்டமாக காணப்படுகின்றன. மேலும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில், சாலையில் வாகனங்கள் வரிசையாக நிற்பதை மற்றோரு புகைப்படம் காட்டுகிறது.
இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் போலாந்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது உரையில், உக்ரைன் "ஏற்கனவே ஒரு மூலோபாய திருப்புமுனையை அடைந்துள்ளது. உக்ரேனிய நிலத்தை விடுவிக்க இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் அதைச் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம். நாங்கள் ஏற்கனவே எங்கள் இலக்கை, எங்கள் வெற்றியை நோக்கி நகர்கிறோம்" என்று அவர் கூறினார்.
மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடக்கூடும் என்று அஞ்சுவதால், உக்ரைனில் நேரடி இராணுவத் தலையீட்டை நேட்டோ தவிர்க்கும் நிலையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நேற்று ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து அதன் படைகளை கட்டுப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை அறிவித்தன.