சரணடைய முடியாது... ரஷ்யாவின் கெடுவை நிராகரித்து துணிந்து எதிர்த்து நிற்கும் உக்ரைன் வீரர்கள்
உக்ரைனிலுள்ள சீவிரோடோனெட்ஸ்க் நகரில் அமைந்திருக்கும் ரசாயன ஆலை ஒன்றில் தங்கியிருக்கும் உக்ரைன் வீரர்களை அவமதிக்கும் விதத்தில் பேசி புதன்கிழமைக்குள் சரணடையும்படி கெடு விதித்திருந்தது ரஷ்யா.
முட்டாள்தனமாக ரஷ்யப் படைகளை எதிர்ப்பதை விட்டுவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள் என சீவிரோடோனெட்ஸ்க் நகரில் அமைந்திருக்கும் Azot என்னும் அம்மோனியா ஆலைக்குள் தங்கியிருக்கும் உக்ரைன் வீரர்களை ரஷ்யா வலியுறுத்தியது.
ஆனால், ரஷ்யா விதித்த கெடுவை நிராகரித்து, சரணடைய மறுத்துள்ளனர் உக்ரைன் வீரர்கள்.
அந்த ஆலைக்குள், 500க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களும், 40 சிறுவர்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களும் தங்கியிருப்பதாக கருதப்படுகிறது.
சீவிரோடோனெட்ஸ்க் நகரிலிருந்து வெளியேற உதவும் மூன்று முக்கிய பாலங்களை சேதப்படுத்தி மக்களை சிக்கவைத்துள்ள ரஷ்யா, மனிதநேய அடிப்படையில் பொதுமக்கள் வெளியேற வழி அமைத்துத் தருவதாகக் கூறியும், அதையும் ஏற்க மறுத்து, தொடர்ந்து Azot ஆலைக்குள் தங்கியிருக்கின்றனர் உக்ரைனியர்கள்.