உக்ரைன் மக்களை தற்போது வழிநடத்தும் ஒரே நம்பிக்கை! துணிச்சலுடன் பெண்கள் மேற்கொள்ளும் காரியம்
உக்ரைனில் போர் நிற்கும் என்ற நம்பிக்கையோடு நாட்டிலேயே இருந்த பலரும் கூட அந்த நம்பிக்கையை இழந்துள்ளனர். இதன் விளைவாக அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - போலந்து எல்லைப் பகுதியில் தங்களது குறைந்தபட்ச உடைமைகளுடன் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் அவர்கள் எல்லையைக் கடக்கும் போது ஒரே ஒரு நம்பிக்கை மட்டும்தான் அவர்களை வழிநடத்துகிறது.
அதுதான், நிச்சயம் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு திரும்புவோம் என்பதே. போர் தொடங்கிய போது ஆயிரக்கணக்கானோர் தங்களது நாடுகளை விட்டு வெளியேறிய நிலையில், பலரும் நிலைமை விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையோடு அங்கேயே தங்கியிருந்தனர்.
ஆனால் நிலைமை சீரடையாமல் உணவுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால், போலந்து நோக்கி தங்களது பணத்தைத் தொடங்குகிறார்கள். நடைப்பயணமாகவோ அல்லது கார்கள் மூலமாகவோ பலரும் போலந்தை அடைகிறார்கள்.
போலந்து எல்லைப் பகுதியை நோக்கி வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களாகத்தான் இருக்கிறார்கள். உக்ரைனிலிருந்து ஆண்கள் வெளியேற தடை விதித்திருப்பதால், பெண்களும் குழந்தைகளும் மட்டுமே துணிச்சலுடன் எல்லையை தாண்டுகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் சண்டை கடந்த மாதம் 24ஆம் திகதி தொடங்கிய நிலையில் தொடர்ந்து 34 நாட்களாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.