உக்ரைன் தானியங்களை விடுவிக்க தயார்... ரஷ்யா முன்வைக்கும் ஒற்றை நிபந்தனை
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு உக்ரைன் துறைமுகங்கள் ஊடாக தானியங்களை விடுவிக்க தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆனால் கடலில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை உக்ரைன் அகற்ற முன்வர வேண்டும் என ரஷ்யா நிபந்தனை வைத்துள்ளது.
ஏறத்தாழ 15 வாரப் போரில் உக்ரைனின் கடற்கரையின் பெரும்பகுதியை ரஷ்யா கைப்பற்றியதுடன், ரஷ்ய போர்க்கப்பல்கள் கருங்கடல் மற்றும் அசோவ் கடல்களை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளன.
இதனால் உக்ரைனால் தானியங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் உணவு விநியோகத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
மட்டுமின்றி, கடற்பரப்பில் உக்ரைன் புதைத்துள்ள கண்ணிவெடிகளும், ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதார தடைகளும் சூழலை மிகவும் மோசமடைய செய்துள்ளதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, பெர்டியன்ஸ்க் மற்றும் மரியுபோல் துறைமுகங்கள் செயல்பட தொடங்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu தெரிவித்துள்ளார். மரியுபோல் துறைமுகமருகே புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் மொத்தமாக அகற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல் சரக்கு கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, 20 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தானியங்கள் உக்ரைனில் ஏற்றுமதிக்காகக் காத்திருக்கின்றன,
மேலும் இது இலையுதிர்காலத்தில் 75 மில்லியனாக உயரக்கூடும் என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆனால், உக்ரைன் காரணமாகவே தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் போயுள்ளது எனவும், அதனாலையே விலையுயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.