ரஷ்யா அனுப்பிய இரகசிய கூலிப்படை... மொத்தமாக முடித்து வைத்த உக்ரைன்: வெளிவரும் பின்னணி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்யாவால் அனுப்பி வைக்கப்பட்ட கூலிப்படை மொத்தமாக ஒழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய- உக்ரைன் போர் 6வது நாளை எட்டியுள்ளது. ரஷ்யா உடன் பெலாரஸ் துருப்புகளும் உக்ரைன் நகரங்களில் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவே தகவல்கள் வெளிவருகின்றன.
இதனிடையே, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்யா அனுப்பிய செச்சினிய கூலிப்படையை மொத்தமாக அழித்து ஒழித்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை செய்தி ஊடக நேரலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு செயலர் வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவின் செச்சினியா பிராந்திய தலைவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதரவாளருமான Ramzan Kadyrov என்பவரே குறித்த கூலிப்படையை அனுப்பி வைத்துள்ளதாகவும்,
குறித்த தகவல் தங்களுக்கு ரஷ்ய தேசிய பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சிலரிடம் இருந்தே தெரிய வந்தது எனவும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய உக்ரைனுக்குள் ஊடுருவிய Ramzan Kadyrov-ன் கூலிப்படைகளை மொத்தமாக அழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு குழுவாக பிரிந்து தாக்குதல் முன்னெடுத்த அந்த கூலிப்படையில் ஒரு பிரிவினரை உக்ரைன் ராணுவம் கொன்றுள்ளதாகவும், இன்னொரு பிரிவு தற்போது துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் மண்ணையும் மக்களையும் ஜனாதிபதியையும் எந்த நாட்டிற்கும் விட்டுத்தர முடியாது எனவும், எங்கள் மண்ணை கடைசி மூச்சுவரை போராடி பாதுகாப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 400 பேர்கள் கொண்ட கூலிப்படையை ரஷ்யா உத்தரவின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஆபிரிக்காவில் இருந்து Wagner குழுமத்தின் கூலிப்படையும் உக்ரைன் ஜனாதிபதியை படுகொலை செய்ய களமிறக்கப்பட்டது.
மூன்று நாட்களில் உக்ரைனை கைப்பற்றும் ரஷ்ய ஜனாதிபதி பிடினின் கொடூர திட்டத்தின் ஒருபகுதியே இதுவெனவும், ஆனால் உக்ரைன் ராணுவத்தினரால் அது முறியடிக்கப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
தலைநகர் கீவில் 36 மணி நேரம் கடுமையான ஊரடங்கு உத்தரவை பிரகடனம் செய்த உக்ரைன், ரஷ்ய ஆதரவு கூலிப்படைகளை பொறிவைத்து அழித்து ஒழித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு என தமது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி.