உக்ரைனின் கனிம வளங்களை குறி வைக்கும் டொனால்டு ட்ரம்ப்... ஜெலென்ஸ்கி அளித்த பதில்
உக்ரைனின் அரிய வகை தாதுக்கள் மற்றும் பிற முக்கியமான கனிம வளங்கள் தொடர்பில் அமெரிக்காவின் ஈடுபாட்டை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தை ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடன் முன்னெடுக்க தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் செய்துகொள்ள தயார்
ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் போர் தொடர்பில் நிதியுதவியை நீடிக்க அமெரிக்காவுக்கு அரிய வகை தாதுக்கள் மற்றும் கனிம வளங்களை உக்ரைன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என ட்ரம்ப் கோரியிருந்தார்.
இந்த நிலையிலேயே, அமெரிக்காவுடன் இது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ள தாம் தயார் என ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். ஆனால் உக்ரைனின் மொத்த கனிம வளங்களையும் ட்ரம்ப் குறி வைத்துள்ளாரா அல்லது அரிய வகை தாதுக்கள் மட்டுமே அவர் குறிப்பிடுகிறாரா என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் வெளியாகவில்லை.
அரிய வகை தாதுக்கள் என்பது மின்சார வாகனங்கள், அலைபேசிகள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு சக்தியை இயக்கமாக மாற்றும் காந்தங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் 17 உலோகங்களின் தொகுப்பாகும்.
இதற்கு சாத்தியமான மாற்றீடுகள் எதுவும் இதுவரை இல்லை. வர்த்தகப் போரை முன்னெடுக்க இருப்பதாக டொனால்டு ட்ரம்பால் மிரட்டப்படும் சீனாவே உலகின் மிகப்பெரிய அரிய வகை தாதுக்கள் மற்றும் பல முக்கியமான கனிம வளங்களை உற்பத்தி செய்யும் நாடு.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனமானது, நிக்கல் மற்றும் லித்தியம் போன்ற பல வகையான தாதுக்கள் உட்பட 50 தாதுக்களை முக்கியமானதாகக் கருதுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் முக்கியமானவை என அடையாளம் காணப்பட்ட 34 கனிமங்களில் 22 படிவுகள் உக்ரைனில் உள்ளன. உக்ரைனிலும் குறிப்பிடத்தக்க நிலக்கரி இருப்புக்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஜெலென்ஸ்கி உறுதி
ஜெலென்ஸ்கியே உறுதி செய்துள்ள தகவல் ஒன்றில், உக்ரைனின் அரிய வகை தாதுக்களின் படிவுகளில் பாதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐரோப்பாவிலேயே அதிக அளவு டைட்டானியம் மற்றும் யுரேனியம் இருப்பு உக்ரைனில் இருப்பதாக ஜெலென்ஸ்கி உறுதி செய்துள்ளார்.
மட்டுமின்றி, உலகப் பொருளாதார மன்றத்தின் தரவுகளின் அடிப்படையில், லித்தியம், பெரிலியம், மாங்கனீசு, காலியம், சிர்கோனியம், கிராஃபைட், அபாடைட், ஃப்ளோரைட் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் முக்கிய சாத்தியமான ஏற்றுமதியாளராகவும் உக்ரைன் உள்ளது.
அத்துடன் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட மேற்கத்திய நட்பு நாடுகளுடன் முக்கியமான ஒப்பந்தங்களில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது.
2033 ஆம் ஆண்டுக்குள் இந்தத் துறையின் மொத்த முதலீட்டுத் திறன் சுமார் 12 முதல்15 பில்லியன் டொலராக இருக்கும் என்றும் உக்ரைன் அரசாங்கம் மதிப்பிடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |