ரஷ்யா இதனை செய்தால்., தாக்குதலை நிறுத்த உக்ரைன் தயார்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு
Ukraine Ready to Halt Refinery attack: உக்ரைனின் மின் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பதிலடி நடவடிக்கைகள் தொடரும் என ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்த தயார்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உக்ரைன் நிறுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனின் மின் மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்புகள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளர்.
ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், போரை நிறுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் இருதரப்புக்கும் பொதுவானதாக மற்றும் நம்பகமான உத்தரவாதங்களுடன் இருக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனின் மின்சாரம் மற்றும் ஆற்றல் மையங்கள் மீதான தாக்குதலை நிறுத்த மறுப்பதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.

மேலும் ஐரோப்பாவில் நடைபெறும் இந்த போருக்கு புடின் தான் முழுக்காரணம். ஆற்றல் மையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துவது இன்றே சாத்தியமான ஒன்றுதான். ஆனால் புடின் உக்ரைனின் மின் மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்புகள் மீது நடத்தும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அவ்வாறு செய்தால் உக்ரைனும் ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தாது என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில் ஜெலென்ஸ்கியின் இந்த அறிக்கை வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.